search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவை மார்க்கெட்டில் காய்கறிகள் விலை வீழ்ச்சி"

    லாரி ஸ்டிரைக் காரணமாக கோவை எம்.ஜி.ஆர். மார்க்கெட்டில் காய்கறிகள் தேக்கம் அடைந்து விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. #LorryStrike
    கோவை:

    நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் தொடர்ந்து 7-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை மாவட்டத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லாரிகள் ஓடவில்லை. இதன்காரணமாக கோவையில் இருந்து வெளி மாவட்டம், வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்படும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பம்புசெட், கிரைண்டர், விசைத்தறி ஜவுளிகள், தென்னை நார் பொருட்கள், காய்கறிகள் தேக்கம் அடைந்துள்ளது. லாரி ஸ்டிரைக் காரணமாக கோவை எம்.ஜி.ஆர். மார்க்கெட்டில் காய்கறிகள் தேக்கம் அடைந்து விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

    இதுகுறித்து எம்.ஜி.ஆர். மார்க்கெட் மொத்த காய்கறி வியாபாரி ராஜேந்திரன் கூறியதாவது,

    தினசரி கோவை மார்க்கெட்டுக்கு 100 லாரிகளில் காய்கறிகள் லோடு கொண்டு வரப்படும். இதில் 90 லாரி லோடு காய்கறிகள் கேரள மாநிலத்துக்கு அனுப்பப்படும். தற்போது லாரிகள் ஓடாததால் 40 முதல் 50 லாரிகளில் லோடு கொண்டு வரப்படுகிறது. சொந்தமாக லாரிகள் வைத்துள்ள கேரள வியாபாரிகள் மட்டுமே காய்கறிகளை அம்மாநிலத்துக்கு ஏற்றி செல்கின்றனர். இதனால் 90 லாரிகள் செல்ல வேண்டிய கேரளாவுக்கு தற்போது 30 லாரிகளில் மட்டுமே காய்கறிகள் கொண்டு செல்லப்படுகிறது. இதனால் கோவை சுற்றி உள்ள 100 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து விற்பனைக்காக கொண்டு வரும் காய்கறிகள் தேக்கம் அடைந்து விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

    கடந்த வாரம் மொத்த விலையில் 1 கிலோ ரூ. 55 -க்கு விற்பனையான சின்ன வெங்காயம் ரூ. 30 முதல் ரூ. 40-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே போல தக்காளி ரூ. 25 -ல் இருந்து ரூ. 12-க்கும், கேரட் ரூ. 40-ல் இருந்து ரூ. 30-க்கும், கத்தரிக்காய் ரூ. 25-ல் இருந்து ரூ. 20 ஆகவும், முருங்கைக்காய் ரூ. 30-ல் இருந்து ரூ. 20 ஆகவும், புடலங்காய் ரூ. 25-ல் இருந்து ரூ. 20 ஆகவும், பீர்க்கங்காய் ரூ. 30-ல் இருந்து ரூ. 20 ஆகவும், வெண்டைக்காய் ரூ. 30-ல் இருந்து ரூ. 22 ஆகவும், பீட்ருட் ரூ. 30-ல் இருந்து ரூ. 20 ஆகவும் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் காய்கறிகளை விற்பனைக்காக கொண்டு வரும் விவசாயிகள் போதிய விலை கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளனர். வெளிமாநிலத்தில் இருந்து விற்பனைக்கு வரும் உருளை கிழங்கு, பெரிய வெங்காயம் ஆகியவவை தொடர்ந்து விலை உயர்ந்தே காணப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #LorryStrike

    ×